சென்னை எனும் பெருந்தெய்வம்





நண்பர்களே,

இது நிச்சயமாக ஒரு அரதப் பழசான ஒரு புகைப்படம் என்பது பார்த்த மாத்திரத்தில் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இது எந்த கிராமத்தில் எடுத்த புகைப்படம் என்று தெரியுமா? சென்னையேதான்.
ஒரு நாள் நண்பர் ஒருவரின் கணிப்பொறியில் தட்டுப்பட்ட இப்புகைப்படத்தை வாங்கி பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டேன்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.......... இந்த சென்னைப் பட்டணம் கிராமமாக இருந்தபோது அதன் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்னென்ன மாதிரியான தொழில்கள் புழங்கியிருக்கும்?.......அன்றைய மக்கள் எவ்விதம் உடுத்தியிருந்திருப்பார்கள்? அவர்களின் பேச்சு வழக்கு மொழி எப்படி இருந்திருக்கும்? கணிக்கவே கடினமாக இருக்கிறதல்லவா? கடினம்தான். காரணம் இருக்கிறது.

மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வாழ்க்கை தரும் நம்பிக்கைக் கீற்றாக சென்னைப் பட்டணம் (சென்னப் பட்டணம் என்பதே சரி.) அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது. கெட்டும் பட்டணம் போய்ச் சேர் என்ற பழமொழிகூட அதனை ஒட்டி வந்ததுதான். இப்படி பொருளாதார வாழ்க்கையில் கெட்டுப்போனவர்கள் இறுதிப்புகலிடமான இப்பட்டணத்திற்கு வந்து குவியக் குவிய சென்னப்பட்டணம் மதராஸ் என்ற கம்பீரப் பெயருடன் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டது.
சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அனைத்து கிராமங்களும் நாகரீகத்தின் பெயரால் அழிக்கப்பட்டு விட்டன. அற்புதமான கூவம் நதி இன்று சாக்கடைக் கால்வாயாக மாற்றப்பட்டு விட்டது. (ஒரு விஷயம் தெரியுமா? பச்சையப்பன் கல்லூரி உருவாகக் காரணமான பச்சையப்ப முதலியார் கூவம் நதியில் குளித்த பிறகே தினசரி வேலைகளை ஆரம்பிப்பாராம்). சென்னை மக்கள் பேசி வந்த மொழி கொச்சைத்தமிழ் என்று இன்றளவும் நம்மால் கேலி செய்யப்படுகிறது.

கள்ளங்கபடமற்ற சென்னை கிராம மக்கள் இங்கு எங்கு வாழ்கிறார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? எனக்குத் தெரிந்தவரை சென்னையின் பூர்வகுடிகள் கூவம் நதியின் ஓரங்களில் குடிசைபோட்டு வாழ்பவர்கள்தான் என்பது எனது திடமான நம்பிக்கை.

அவர்கள்தான் சென்னையின் மொழியில் பேசுகிறார்கள். அந்த முரட்டு மொழியின் பின்னணயில் கள்ளங்கபடமற்ற தன்மை தெரிகிறது. எளிதில் இளகிவிடும் மனது படைத்தவர்கள் அவர்கள். இன்னும் ரிக்ஷா ஓட்டிக்கொண்டும் மூட்டை தூக்கிக்கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் உடல் உழைப்பையே நம்பி வாழும் அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் வந்தேறிகளாகிய நாம் செய்யவேண்டிய நன்றிக் கடன் நிறைய இருக்கிறது.

பழைய சென்னையின் புகைப்படங்கள் நம்மை ஏதேதோ உலகத்திற்குக் கொண்டு செல்கின்றன.

சரி. அடுத்தமுறை ரிக்ஷாக்காரரோ, மீன்பிடித் தொழிலாளியோ, துப்புரவுப் பணி செய்பவரோ "இன்னாபா, ஒத்துபா! அப்டிக்கா போணும்." என்றோ, ''பேமானி, கஸ்மாலம்" என்றோ, ''இஸ்துகினு'' , ''வலிச்சுகினு'' என்றோ ஒரு உரையாடலை எதிர்கொள்ள நேர்ந்தால் அத்திசையை நோக்கி வணங்குங்கள். அவர்கள் விரல்களுக்கு முத்தமிடுங்கள்.

நாம் நடப்பதும் தூங்குவதும் பணிபுரிவதும் அவர்களின் நிலத்தில்தான்.நமது நாகரீகத்தமிழ் இங்கு வளர்ந்தது அவர்களின் மொழியைக் கொன்றுதான். நாம் வாழும் வீடுகள் அவர்களின் குடிசைகள் இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். கூவம் என்னும் புண்ணிய நதியின் தீர்த்தத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். சென்னை என்னும் பெருந்தெய்வம் உங்களையும் தன் மகனாகவோ மகளாகவோ எண்ணித் தன் மடியில் அமர்த்திக் கொள்ளும்.

பழைய சென்னை குறித்துப் பேச நிறைய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றைப் பற்றிப் பேசுவோம்.

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு