சுடுகுஞ்சு




கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் நூலில் கிடைத்த செய்தி அது. அநேககமாக 'சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்' என்ற நூலாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். வேறு புத்தகமாகவும் இருக்கலாம்.

அதில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஒரு அற்புதமான செய்தியைக் கூறுகிறார். அதாவது தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரைக்கும் தெற்கே உள்ள மாவட்டங்களில் ஒரு சொல்லாடல் உண்டு. யாருமே இல்லாத கிராமத்துத் தெரு 'வெறிச்' என்று இருந்தது என்று இப்போதெல்லாம் எழுதுகிறோமே, அதற்கு மாற்றாக பொருள் நயமும் சொல் நயமும் மிக்க வாக்கியத்தை அம்மக்கள் பயன்படுத்துகிறார்கள். கடுமையான வெயில். சாலையில் கால் வைக்க முடியவில்லை. அதனாலும், வேலைக் காட்டிற்கு அவரவர் சென்று விட்டதாலும் கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
இதனை தென் மாவட்ட மக்கள் ' தெருவிலே ஒரு சுடுகுஞ்சைக் கூட காணோம்' என்று குறிப்பிடுகிறார்கள். சுடுகுஞ்சு என்பது கோழிக்குஞ்சு. கிராமம் என்றால் கோழி,
ஆடு, மாடு இல்லாமலா? சரி. கோழிக்குஞ்சு என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! அது என்ன சுடுகுஞ்சு?
அடைகாக்கப்பட்ட முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் கோழிக்குஞ்சு இளஞ்சூடாக இருக்கும். பிறந்தஉடனேயே அங்கு ஒடுவதும் இங்கு ஓடுவதுமாக இருக்கும். அதனைத் தாய்க்கோழி கண்டித்து தனது இறக்கைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். அதனால் கோழிக்குஞ்சின் வெப்பம் இன்னும் அதிகமாகவே இருக்கும். அவ்வாறு துடுக்குத்தனமும் அழகும் நிறைந்த பயமறியாத சுடு கோழிக்குஞ்சுகூட அந்த மதிய வெயிலில் தெருவில் கால்வைக்க யோசிக்குமாம். எதற்கு வம்பு என்று தாயுடன் ஐக்கியமாகிவிடுமாம். இதுதான் சுடுகுஞ்சின் கதை. எப்படி இருக்கிறது?

குறிப்பு: மேலாண்மை பொன்னுச்சாமி என்றால் அவர் என்னவோ வார்ட்டன், கெல்லாக் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த மேலாண்மை நிறுவனங்களில் எம்.பி.ஏ. படித்தவர் என்று புரிந்துகொள்ள வேண்டாம். குறைவான பள்ளிப்படிப்பு அனுபவம் கொண்டவர் அவர். மேலாண்மறைநாடு என்பது அவரது கிராமத்தின் பெயர். படிப்பில் குறை இருந்தாலும் முற்போக்கான எழுத்துக்களில் அவரது மேலாண்மை சற்று கெட்டிதான். வாய்ப்பு கிடைத்தால் அவரது நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளைப் படித்துப் பாருங்கள். அவரது 'சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் ' என்னும் நூல் வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி என்று சொல்லலாம்.

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு