தலையில்லாத முண்டம்

அநேகமாக நான் 3 அல்லது 4 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரமது. சாலைப்புதூரில் இருந்து பக்கத்து ஊரான காளாஞ்சிபட்டிக்கு தாத்தாவின் வீட்டுக்குச்  சென்றிருந்தேன். (அதுதான் எனது சொந்த ஊரும்கூட). ஒரு மதிய வேளை. ஊரே ஒரே அல்லோலகல்லோகலமாக இருந்தது. எல்லோர் முகத்திலும் பீதி. ஊரின் நடுவில் இருந்த வேப்பமரத்தின் தழைகளை ஆளாளுக்கு பறித்துக்கொண்டிருந்தனர். சிலர் கிளைகளையே முறித்துக்கொண்டு ஓடினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன நடக்கிறது என்று கேட்டேன்.
“உனக்குத் தெரியாதா? நம்ம ஊருக்குப் பேய் வரப்போகுதாம்”
“பேயா?”
”பேய்கூட இல்ல...தலை இல்லாத முண்டம் வரப்போகுதாம். அதுக்காகத்தான் எல்லாரும் வேப்பந்தழைய ஒடிச்சு வீட்ல எரவாரத்துல (முகப்பில்) சொருகி வைக்கிறோம். உங்க வீட்டுக்கு நீ ஒடிச்சுட்டுப்போகலையா?”
“இல்லையே!”
“அப்படின்னா யார்கிட்டயாவது ரெண்டு தழ வாங்கிக்கிட்டுபோ...உங்க தாத்தா வீட்ல வைக்கணும்ல”
“சரி சரி...தலை இல்லாத முண்டம் என்ன பண்ணுமாம்?”
“அது வந்து கதவத் தட்டும். குடிக்கத் தண்ணி கேக்கும். நாம கதவ தெறக்க்ககூடாது. தெறந்தா நாம ஒடனே செத்துப்போயிருவோம்”
எனக்கு பாதி உயிர் போய்விட்டது.
”அப்போ என்ன பண்ணனும்?”
“நாளைக்கு வான்னு சொல்லிறணும். தினமும் வரும். ஆனா வீட்ல வேப்பந்தழ இருந்தா ஓடீரும். இல்லைன்னா எரியுற கொள்ளிக்கட்டைய காமிச்சாக்கூட ஓடீரும்”

“அத முதல் நாளே சொருகி வெச்சா என்ன?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு அந்தப் பையன் ஓடிவிட்டான். எனக்கு வயிறு கலங்கத் தொடங்கியது. ஓட்டமும் நடையுமாக எனது தாத்தா வீட்டுக்கு விரைந்தேன். தாத்தா வீடு திறந்து கிடந்தது. வேப்பங்குலையும் செருகப்படவில்லை. எனக்கு சுரீரென்று இருந்தது. அதற்குள் யாரோ ஒரு மகராசன் ஒரு இலையைக் கொடுக்க, அதை எரவாரத்தில் செருகி வைத்தேன்.

இது நிகழ்ந்து ஒரு மாதத்துக்குமேல் யாரும் 7 மணிக்குமேல் வீட்டுக்கு வெளியே வந்து நான் பார்த்ததில்லை. யாரைப்பார்த்தாலும் தலை இல்லாத முண்டத்தைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. மெல்ல மெல்ல அந்த பயம் விலகியது.

பின்னர் அரசல் புரசலாக ஒரு பேச்சு பரவியது. அதாவது கரூர் அருகே ஒரு லாரியில் தகரம் ஏற்றிக்கொண்டு சென்றார்களாம். மோட்டார் பைக்கில் சென்ற ஒருவர் கழுத்தை தகரம் வெட்டிவிட்டதாம். கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தலை இல்லாத அந்த உடலுடன் மோட்டார் பைக் சிறிதுதூரம் சாலையில் பயணித்து, அப்புறம் மோதி விழுந்திருக்கிறது. அதைப்பார்த்து அரண்டுபோய் யாரோ கிளப்பிவிட்ட பீதிதான் தலை இல்லாத முண்டம்!

உண்மை எப்படி இருந்தாலும் பால்ய வயது பீதி இன்னும் நெஞ்சில் உறைந்துதான் கிடக்கிறது.

Popular posts from this blog

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு