கோவைப்பழம்





சாலைப்புதூர் பள்ளியில் எங்களுக்கு கிடைத்த தின்பண்டங்கள் குறித்துக் கடந்த பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா! இந்தப் பதிவில் முழுக்க முழுக்கப் பட்டிக்காடான காளாஞ்சிபட்டியில் எனக்கு வேறுவிதமான இயற்கைத் தின்பண்டங்கள் கிடைத்தன. அங்கு உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் கொஞ்சநாட்கள்தான் படித்தேன். 3ம் வகுப்பு மட்டும்.

அப்போது விதம் விதமான பொருட்கள் எங்களுக்கு தின்னக் கிடைத்தன. அதில் குறிப்பிட வேண்டியது புளியம்பிஞ்சு. பூ பூத்த புளியமரம் ஒரு விதமான மணத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அந்தப் பூக்களையும் அப்படியே சாப்பிடலாம். லேசான புளிப்புச்சுவையும் துவர்ப்புச் சுவையும் அடங்கியது புளியம்பூ. சிலருக்குத்தான் அந்தச் சுவை பிடிக்கும்.


ஆனால் அனைவரையும் கவர்வது புளியம்பிஞ்சுதான். சுண்டுவிரலில் கால்பகுதிக்கும் குறைவான மெலிய பிஞ்சுகள் லேசாக உடைத்தாலே உடைந்துவிடும். அவை அட்டகாசமான சுவையுடன் இருக்கும். நறுக் நறுக்கென்று சாப்பிடுவதும் நல்ல அனுபவம்தான். அவற்றைச் சிறிது உப்பு, மிளகாய்ப்பொடியுடன் தொட்டுக்கொண்டு தின்போம். சட்னியின் சுவையோடு இருக்கும். விழுது விழுதாக சட்னி செய்து சாப்பிடுபவர்களும் உண்டு. அவர்கள் திடீரென்று உப்புக்கும் மிளகாய்க்கும் எங்கே செல்வது? அதனால்தான் மதிய உணவு சமைக்கும் அக்கா அல்லது பாட்டியை தாஜா செய்து அவற்றைப் பெற்றுக்கொள்வோம்.

இது தவிர சாதாரண முறுக்குக் கள்ளி மரத்தில் பிரண்டைச் செடிகள் படர்ந்து கிடக்கும். பிரண்டையின் பழம் சுவையாக இருக்கும். சப்பாத்திக்கள்ளி மரத்தில் ஒரு அற்புதமான பழம் இருக்கும். எங்காவது கிராமப்புறங்களில் பேருந்தில் செல்லும்போது வேலிகளில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

மெலிதான, மிகவும் கூர்மையான முட்கள் அச்செடியில் நிரம்பியிருக்கும். செடிகளும் குட்டையாகத்தான் இருக்கும். கள்ளியின் பக்கவாட்டில் கள்ளிப்பழம் இருக்கும். பார்ப்பதற்கு மலரத் தயாராக இருக்கும் ஒரு ரோஜா மொட்டு போலத் தோற்றமளிக்கும். அதன்மேலும் சிறிய முட்கள் இருக்கும். கையில் குத்திவிட்டால் பிடுங்குவது கடினம். எளிதில் உடைந்துவிடும் என்பதுதான் காரணம்.

கையில் பாய்ந்த முள்ளைப் பிடுங்குவதற்கும் ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. ஒரு வழியாக அதனைப் பிடுங்கிவிட்டீர்கள். அடுத்து பழத்தில் உள்ள முட்களை ஒரு பாறாங்கல்லில் வைத்து உரசிவிட வேண்டும். உதிர்ந்துவிடும். அப்புறம் ஊதுங்கள். சுத்தமாகி விட்டதல்லவா?
அதன்பிறகு பழத்தைப் பிய்த்து விடுங்கள். சிவப்பு வண்ணத்தில் சாறு ஒழுகும். உடனடியாக அதனைச்சுவைத்துவிடவேண்டும். நாக்கும் உதடுகளும் லிப்ஸ்டிக் போட்டதுபோல சிவந்துவிடும். பழமும் சுவையாக இருக்கும். பழத்தின் நடுவில் ஒரு முள் உருண்டை வடிவில் இருக்கும். அதனைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அவ்வளவுதான்.
எங்கள் உதடுகளைச் சிவப்பாக்க கள்ளிப்பழத்தைத்தான் பயன்படுத்துவது வழக்கம்.

கள்ளிப்பழம் போலவே இயற்கை கொடுத்த இன்னொரு வரம் கோவைக்காய். கடைகளில் கிடைக்கும் சமையல் கோவைக்காய் அல்ல இது. வேலியில் படரும் கசப்பான கோவைக்காய். கோவைக் கொடி (தழை) ஆடுகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. கோவைப்பழம் பழுத்த பிறகு லேசாக வெடிக்கும். அப்போது அதிலிருந்து தேன் ஒழுகும். ஒரு கொடியைக் கண்டுபிடித்தால் 5 அல்லது 6 பழங்களாவது கிடைக்கும். அற்புதமான சுவை கோவைப் பழத்திற்கு. கோவைக்காயை வற்றல் (வத்தல் என்பது கொச்சைத்தமிழ். வெயிலில் வாட வைத்து, வற்ற விட்டு சமைப்பதால் வற்றல் என்று ஆயிற்று) சுவையானது. மருத்துவக் குணம் படைத்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்து என்று சொல்வார்கள்.

அடுத்த பதிவில் மேலும் சில இயற்கைத் தின்பண்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

புளியம் பிஞ்சு