சுத்தற முட்டாய், ,பால் ஐஸ்......



கிராமங்களில் உள்ள சிறுவர்களுக்கு பாக்கெட் மணி எனப்படும் கைச்செலவுப் பணம் கிடைப்பது நிரம்பவும் (ரொம்பவே) அரிது. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! நான் சாலைப்புதூர் மற்றும் காளாஞ்சிபட்டி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகளில் படித்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? இந்த இரண்டு ஊர்களுமே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பவைதான். ஆனர்ல் இரண்டுக்கும் தலைகீழ் வித்தியாசங்கள் உண்டு. சாலைப்புதூர் திண்டுக்கல்&பழநி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இதனால் நாகரீகத்தின் சில துளிகள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடக்கும். அங்கு நான் 3ம் வகுப்புவரை படித்தேன்.
வகுப்பு என்று அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொன்னதில்லை. 'ஒண்ணாப்பு, ரெண்டாப்பு, மூணாப்பு, நாலாப்பு, அஞ்சாப்பு'&தான். லும். நூநான் பால்வாடியிலிருந்து (பாலர் பள்ளி அல்லது பாலகர் பள்ளி என்பதுதான் தமிழில் சரியான சொற்கள்.) ஒண்ணாப்பு போவதற்கு கஷ்டமே படவில்லை. காரணம், இரண்டும் ஒரே கட்டிடத்தில் இருந்ததுதான். மட்டுமல்லாமல் இரண்டு வகுப்புகளுக்கும் இடையே தடுப்புச் சுவர் எதுவும் கிடையாது.

எனவே பால்வாடியில் எங்களைத் தூங்க வைக்கும்போதே மெல்லக் கிளம்பி ஒன்றாம் வகுப்பு மாணவர்களோடு உட்கார்ந்து கொள்வேன். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாது என்பதால் ஒரு ஆர்வம். கிளர்ச்சி. சில நேரம் ஒண்ணாப்பு ஆசிரியர் எங்களைக் கண்டுபிடித்துக் களையெடுத்துவிடுவார். 'டேய், நீ பால்வாடியில்ல? அங்க போ!' என்று துரத்திவிடுவார்.

சாலைப்புதூர் பள்ளியில் ஐஸ் விற்பனை படுஜோராக நடக்கும். சாதா ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் என்று பல வகைகள் உண்டு. சாதா ஐஸ் விலை 5 பைசா. இதுதான் ஏழைகளின் ஐஸ். பால் ஐஸ் 15 பைசா. சேமியா ஐஸ் 25 பைசா. ஜவ்வரிசி ஐஸ¨ம் அதே விலைதான் என்று நினைக்கிறேன்.

இதில் நாங்கள் ஒரு புதுச்சுவையைக் கண்டுபிடித்தோம். எங்கள் பள்ளியில் சிறிய கமலா ஆரஞ்சுகள் விற்பனையாகும். அதுவும் 5 பைசா, 10 பைசா விலையில்தான் இருக்கும். அதனை வாங்கி இரண்டாக அறுத்து வைத்துக் கொள்வோம். தலையை வானத்தை நோக்கி வைத்துக்கொள்வோம். ஐஸை வாய்க்குள் நுழைத்துக்கொள்வோம். அதன்பிறகு அறுத்து வைத்திருக்கும் ஆரஞ்சுப் பழ மூடியை எடுத்து ஐஸ் மீது பிழிவோம். சுவையான ஆரஞ்சுப் பழச்சாறு வாய்க்குள் செல்லும். எப்படி யோசனை?!

இதுதவிர இலந்தைப் பழ வடை, இலந்தைப் பொடி ஆகியவை வித்தியாசமான சுவைகளில் விற்கப்படும். அதில் சிலருக்கு ஆர்வமுண்டு. 'சுத்தற முட்டாய்' என்று ஒன்று விற்கும். சுற்றுகிற மிட்டாயாம்!. 10 பைசா வடிவில் அந்த மிட்டாய் இருக்கும். அதில் மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாய் இரண்டு துளைகள் இடப்பட்டிருக்கும். துளைகளின் வழியாக நூல் ஒன்று செல்லும். நூலுக்கு முடிச்சுப் போட்டிருப்பார்கள்.
நூலின் இரு முனைகளைக் கைவிரலில் கோர்த்துக்கொண்டு சுற்றினால் நடுவில் உள்ள மிட்டாய் கிர் கிர் என்று சுற்றும். சத்தமும் பிரமாதமாகக் கேட்கும்.
இதனை இயக்கிக்கொண்டே போய் பெண் பிள்ளைகளின் முடியைக் கத்தரித்துவிடும் குறும்புக்கார மாணவர்களையும் அன்றைய பள்ளிகளில் பார்க்கலாம். முந்தைய பதிவில் நான் சொல்லியிருந்ததால் உங்களுக்கு எள் மிட்டாய் எனப்படும் கடுக்கு மிட்டாய் பரிச்சயமாகியிருக்கும். குருவி, பேருந்து, யானை போன்ற வடிவங்களில் பிஸ்கெட்களும் அன்றைய நாட்களில் கிடைக்கும். அவற்றைத் தவிட்டு ரொட்டி என்றும் குருவி ரொட்டி என்றும் சொல்வோம்.

சீரகத்தின் மேல் இனிப்பு தடவி விற்பனை செய்யப்படும் சீரக மிட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை பள்ளிக் கூடங்களில் விற்கப்படுகிறது. இவையெல்லாம் செயற்கைத்தின்பண்டங்கள். அடுத்த பதிவில் இயற்கைத் தின்பண்டங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு