ஊ.ஒ.து.பள்ளி





கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு என்று சில தனித்துவமான அனுபவங்கள் உண்டு. நானும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள காளாஞ்சிபட்டி என்ற கிராமத்திலும் சாலைப்புதூர் என்ற கிராமத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். சென்னையில் தற்போது படித்துவரும் குழந்தைகளைக் கேட்டால் 'நான் பத்மா சேஷாத்ரியில் படிக்கிறேன்' என்றோ, 'டிஏவி&பள்ளியில் படிக்கிறேன்' என்றோ அல்லது கார்ப்பொரேஷன் பள்ளியில் படிக்கிறேன் என்றோ பதில் கூறுவார்கள். ஆனால் மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களைக் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

"நான் ஊ.ஓ.து.பள்ளியில் படிக்கிறேன்" என்றோ ''ஊ.ஒ.தொ. பள்ளியில் படிக்கிறேன் " என்றோ கூறுவார்கள்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி என்பது அதன் விளக்கம். இப்பள்ளிக்கூடங்களில் உள்ள மதிய உணவுத்திட்டத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கவனிக்கிறது. இதற்காக சத்துணவு அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். அவருக்குக் கீழே சமையல் பணியாளர் இருப்பார். இதுதவிர பள்ளிக் கட்டிடம் கட்டுதல், பராமரிப்பு போன்றவற்றையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (ஙிறீஷீநீளீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ளியீயீவீநீமீ) கவனித்துக்கொள்ளும். அதனால்தான் சாதாரண பள்ளிக் கூடம் ஊ.ஓ. பள்ளியாகிவிடுகிறது.

இப்பள்ளிகளில் கல்வி, சத்துணவு, பாடப்புத்தகங்கள் அனைத்தும் இலவசம். சட்டையோ அல்லது டிரவுசரோ கிழிந்த சிறுவர்கள், பாவாடை கொக்கி பிய்ந்து விழுந்துவிட்டதால் ஹ¨க் கொண்டு சரிசெய்த சிறுமிகளை இங்கு அதிகம் பார்க்கலாம். அதேபோல டிராயரின் பட்டன் உடைந்ததால் அரைஞாண் கயிற்றைக்கொண்டு சமாளிக்கும் சிங்கங்களையும் பார்க்கலாம்.
ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புக் குழந்தைகள் இயல்பாகவே குழந்தைகளைப் போல நடந்துகொள்வார்கள். 3ம் வகுப்பிலிருந்துதான் அவர்களுக்கு ஒரு பெரிய மனிதர் தோரணையே வரும். சிறிய குழந்தைகளோடு விளையாடத் தயங்குவார்கள்.

அதைவிட முக்கியமான விஷயம், 3ம் வகுப்பில்தான் குழந்தைகளுக்குப் பல் விழுந்து முளைக்கும். அதனால் எந்த ஒரு மூன்றாம் வகுப்பின் வகுப்பறைக்கு நீங்கள் சென்றாலும் அங்கு குறைந்தபட்சம் 10 ஓட்டைப் பல்லன்களையும், பல்லிகளையும் (?) பார்க்கலாம். பல் விழுவதே முக்கியமான ஒரு திருவிழா மாதிரிதான். பல் விழுவதற்கு கொஞ்ச நேரம்வரை அது அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருக்கும். அங்கு முகம்பார்க்கும் கண்ணாடி இருக்காது என்பதால் டிபன் பாக்சின் உள்புறத்தைப் பயன்படுத்தி பல்லின் நடமாட்டத்தை அறிந்துகொள்வார்கள். பிடுங்கலாமா என்று கை பரபரக்கும். ஆனால் அதற்கு ஈறுகள் ஒத்துழைக்காது. சித்ரவதையாக இருக்கும்.

ஒரு வழியாகத் தானாகவே பல் விழுந்துவிடும். உடனடியாக அதனை கையில் எடுத்து வைத்துக்கொள்வார்கள் சிறுவர்கள். உடலிலிருந்து பிரிந்த பொருளாகிவிட்டதால் அந்த அந்நியப்பொருளைக் கைகளில் வைத்துக்கொண்டு ஞானப்பார்வை பார்ப்பதுண்டு. அதன்பின் விபரமறிந்த ஒரு நண்பன் அல்லது நண்பி ஓடிவந்து 'அச்சச்சோ, இப்படியே இதைக் கையில் வைத்திருக்கக்கூடாது. சாணியில் புதைத்து கூரையில் எறி " என்று அறிவுரை கூறுவார்கள். சாணிக்குத் திடீரென்று எங்கே போவது?

எதேச்சையாக ஏதாவது ஒரு எருமைமாடு பள்ளியைக் கடந்து செல்லும்போது சாணி போட்டுவிட்டால் ஓடிச்சென்று எடுத்து வருவார்கள். சாணியை உருட்டி அதற்குள் உடைந்த பல்லைப் புதைத்து கூரை எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அவர்களின் கெட்ட நேரத்திற்கு அங்கு கூரை வீடே இருக்காது. எப்படியோ ஒரு கூரைவீட்டைக் கண்டுபிடித்து அதன்மீது சாணி உருண்டையை எறிந்துவிடுவார்கள். அப்புறம் ஒரு கூத்து இருக்கிறது. உருட்டி எறிந்த சாணி உருண்டை உருண்டு திரும்பவும் தரையில் விழுந்துவிடும். அப்படி விழுவது மேற்படி பல் விழுந்தவருக்கு எதிரானது. இந்த சம்பவத்தால் அவருக்குப் பல் முளைக்காமல் போய்விடும் விபரீதம் நிகழ்ந்துவிடக்கூடும் என்று பலமாக நம்பப்படுகிறது. கீழே சாணி உருண்டை விழுந்துவிட்டால் அதனைத் திரும்பவும் உருட்டி கூரையில் எறிந்துவிடுவார்கள்.

விருதுநகரிலும் திருவண்ணாமலையிலும் மாணவர்கள் விழுந்த பல்லை மண்ணில் புதைத்து வைத்து விடுவார்களாம்.
பல் விழுந்த கொஞ்ச நாட்களுக்கு நம்மவருக்குப் பல் முளைக்காது. உடனே அவருடைய தாய்க்கு கவலை வந்துவிடும். உடனே பையனின் அல்லது பெண்ணின் தாய்மாமனை அழைத்துக் கொண்டு வருவார்கள். அவர், ஒரு நெல்மணியை எடுத்து அக்குழந்தையின் பல் ஈற்றில் (எகிறு என்பது கொச்சைத்தமிழ்) கீறி விடுவார். அப்புறம் பல் முளைக்கும்.

அரசுப்பள்ளிகளில் இப்போது நல்ல சத்துணவு கிடைக்கிறது என்று நினைக்கிறேன். 1980களில் நிலைமை தலைகீழாக இருந்தது. சத்துணவு சோற்றுக்கே ஒரு தனி மணம். அதாகப்பட்டது கெட்ட வாடை. இருப்பினும் அது எங்களுக்கு கவர்ச்சிகரமாகவே தோன்றும். வரிசையில் நின்று அதனை வாங்கிக்கொள்ள வேண்டும். இதில் அமைப்பை (ஷிஹ்stமீனீ) மீறி குறுக்கே புகுந்து கலவரம் செய்பவர்களும் இருக்கவே செய்வார்கள். சோனிப்பையன்கள் அடி வாங்கிக்கொண்டு வழிவிட வேண்டியதுதான். நான் சோனிப் பையன்கள் சங்கத்தில் முக்கிய உறுப்பினர்.
சத்துணவு சாம்பார் மாதிரி ஒரு திரவத்தை என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை. மஞ்சள் நிறம் மட்டுமே சாம்பார் என்பதற்கான அடையாளம். மற்றபடி அதில் ஒரு ஜீவனும் இருக்காது. எங்காபது கத்தரிக்காய் தோல் கிடைத்தால் அதனைப் பெறும் மாணவன் போன பிறவியில் புண்ணியம் செய்தவனாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வழியாக உணவைப் பெற்றுக்கொண்ட பிறகு வட்ட வடிவமாக உட்கார்ந்து சாப்பிடுவதே வழக்கம். யாகூ குரூப்ஸ் மற்றும் கூகிள் கம்யூனிட்டி போல இதுவும் ஒத்த கருத்துடையவர்களின் வட்டம்தான். ஒத்துவராதவர்களை வட்டத்திற்குள் சேர்க்க மாட்டார்கள்.

பள்ளி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அது நீண்டுகொண்டே போகும். அடுத்த பதிவில் இன்னும் பேசுவோம்!

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு