காக்கா கடி




கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்த அனைவருக்கும் காக்கா கடி என்ற சொல் மிகவும் பரிச்சயமானதாகவே இருக்கும். காக்கா கடி என்பது காகம் வந்து கடிப்பதல்ல. காகத்தைப் போலப் பட்டும் படாமலும் கடிப்பதாகும். பள்ளிச்சிறுவர்களில் யாரேனும் ஒருவரிடம் ஒரு உணவுப்பொருள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாணவன் அல்லது மாணவியின் நண்பனோ தோழியோ அருகில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது கொடுக்காமல் உண்ண மனசு வராது. முழுவதுமாகக் கொடுக்கவும் மனசு வராது. எனவேதான் இந்த காக்கா கடி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள்.

பொதுவாக மிட்டாய், கடலைமிட்டாய், நெல்லிக்காய், கடுக்கு மிட்டாய் (எள் மிட்டாய் அது. கடிக்கும்போது கடுக் என்று சத்தம் வருவதால் அது 'கடுக்'கு மிட்டாய் ஆனது. கடிப்பதற்கும் கடினமாகத்தான் இருக்கும்.) போன்றவைதான் காக்கா கடிக்கு ஆளாகும். தனது உணவுப் பண்டத்தைப் பகிர்ந்து தர விரும்பும் உடைமைதாரர், அதனை தனது சட்டை அல்லது பாவாடையின் ஒரு முனையில் வைத்து அப்பண்டத்தை துணியால் சுற்றி மூடிவிடுவார். அதன்பிறகு லாவகமாக அந்த துணியுடன் இணைந்த உணவுப்பண்டத்தை மெலிதாகக் கடித்து விடுவார். உடனே அது நான்கைந்து துண்டுகளாக உடைந்து விடும். அதன்பிறகு துணியைப் பிரித்து துகள்களைப் பங்கிட்டு நண்பருக்கு அளிப்பார். சிறு சிறு துகள்களாக உடைந்திருக்கும் என்பதால் ஒன்றிரண்டு துகள்களைக் கூடுதலாகவே நண்பர்களுக்கு வழங்கி நல்ல பெயர் எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. (இதனைத்தான் இங்கிலீஷ்காரன் பிராண்ட் பொசிஷனிங் என்கிறான்.)

இப்படி தாராள மனதுக்காரன் என்ற பெயர் எடுத்தவனுக்கும் சோதனை வருவதுண்டு. லேகோ பின்ன ருசி என்று ஒரு சமஸ்கிருதப் பழமொழி உண்டு. உலகம் பலவிதம் என்பது அதன் பொருள். அதற்கேற்ற மாதிரி நமது நல்ல மனதுக்காரனின் நண்பர்களில் சிலர் தீயவர்களாக இருப்பார்கள். தங்களிடம் உள்ளதைத் தாங்களே தின்றுவிடும் கல்நெஞ்சக்காரர்கள் அவர்கள். அவர்களுக்கு மாணவ சமுதாயம் 'தான் தின்னி' (தானாகத் தின்பவராம்!) என்று பெயர் சூட்டி அவரை சமுதாயத்தின் முன் அவரை அம்பலப்படுத்தும். அந்த அவப்பெயரிலிருந்து தன் பெயரை மீட்டெப்பதற்காக அவரும் சிறு சிறு தானங்கள் செய்வதுண்டு.

தனக்கு வழங்கப்படும் 'கெட்டவன்' பட்டத்தைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாதவனைப் பார்த்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நல்ல நண்பன் அப்பாவியாகக் கேட்பான் "ஏ....குடுப்பா! நான் உனக்கு அன்னிக்கு கடலை முட்டாய் குடுத்தேன்ல?!''.

அதற்கு கல்நெஞ்ச நண்பன் "போடா, பதிலுக்கு நானும் நெல்லிக்காய் குடுத்துட்டேன்ல!'' என்பான். உடனே நல்லவனுக்குக் கோபம் வந்து சாபமிடுவான். ஒரு கட்டத்தில் "நான் குடுத்த கடலை முட்டாயைக் கக்கு'' என்று சீறுவான். அதாவது வாந்தி எடுத்தாவது அதனைத் திரும்பத் தந்துவிட வேண்டுமாம். இந்த வசனங்கள் காலகாலமாய் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன்கூட, ஒருத்தி கூட தான் உண்ட தின்பண்டத்தை மேற்கண்ட முறையில் திரும்பத் தர முடிந்ததில்லை.

காக்கா கடி விஷயத்தில் பெண் குழந்தைகள் ரொம்பவே தாராளமாக நடந்துகொள்வார்கள். அவர்களின் ஜியாமெட்ரி பாக்ஸ் (நாங்கள் ஜாமென்ட்ரி பாக்ஸ் என்று அழைப்போம்). அது ஒரு மந்திரப் பெட்டி மாதிரி. ஜியோமெட்ரி கருவிகள் இருக்கிறதோ இல்லையோ அதில் பாதி கடித்த நெல்லிக்காய் ஒன்று நிச்சயம் இருக்கும். அதில் கொஞ்சம் மையும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுகுறித்து யாருக்கும் கவலை இருந்ததில்லை.

காக்கா கடிக்கு பெரிய நெல்லிக்காய் மிகவும் வசதியான ஒன்று. எளிதாகக் கடித்துக் கொடுத்துவிடலாம். கடிக்கும்போதே சாறு வாய்க்குள் செல்லும். அது ஒரு போனஸ் மாதிரி. அதனை யாரும் கேள்வி கேட்பதில்லை. காக்கா கடி கடித்துத் தரும்போது அதில் கடித்தவரின் எச்சில் கட்டாயம் இருக்கும். அதுவும் ஒரு பொருட்டல்ல.

அடுத்த பதிவில் கிராமத்திற்கே உரிய சில இயற்கைத் தின்பண்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு