இணைய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எங்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காத வகையில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜோசிய, ஜாதக வல்லுநர்களுக்கு வேலை வைக்காமல் குழந்தைக்குப் பெயரும் சூட்டி விட்டோம். தூரிகை என்பது பெயர். நல்லது.

குழந்தைப் பிறப்பை ஒட்டி எனக்கு கிடைத்த ஒரு தகவலை இன்று பகிர்ந்துகொள்கிறேன்.
எனது குழந்தை பிறந்த மூன்றாம் நாளன்று அதனைத் தூங்க வைப்பதற்காக தொட்டில் கட்டினோம். குழந்தையைத் தொட்டிலில் போடுவதற்கு முன்பு திசைகளைச் சரிபார்த்துக்கொண்டார்கள்.
மேற்கு கிழக்காகப் படுக்க வைத்து குழந்தையைத் தூங்க வைத்தோம். இது சாதாரணமாகப் பார்ப்பதற்கு மூடநம்பிக்கை போலத் தெரிந்தாலும் இதிலும் ஒரு அறிவியல் இருக்கிறது. பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்காதே என்று கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். காரணம், மின் காந்தக் கதிர்கள் தெற்கு வடக்காகத்தான் பயணிக்குமாம். இது நமது தூக்கத்தையும், கனவுகளையும் பாதிக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அதனால்தான் கிழக்கு மேற்காகப் படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.
அதேபோல எனது குழந்தையைத் தொட்டிலில் போடுவதற்கு முன்பு அம்மிக் குழவி ஒன்றைப் போட்டு முன்னும்பின்னுமாக மூன்று முறை ஆட்டினார்கள் பெரியவர்கள். அதுவும் ஒரு சம்பிரதாயம்தானாம். ஆனால் அதில் உள்ள காரணம் எளிதில் அறிந்துகொள்ள முடிகிற ஒரு விஷயம்தான்.
தொட்டில் பொதுவாக நூல் சேலையில்தான் கட்டப்படும். தற்போது நவீன தொட்டில்களில் கிளிப்கள் வைத்து, கொக்கிகள் வைத்து அமைக்கிறார்கள். எனவே பாதுகாப்புக்கும் பங்கமில்லை. பழைய தொட்டில் முறையில் வீட்டு உத்திரத்தில் சேலையைப் போட்டு அதில் முடிச்சுப் போட்டு குழந்தையை அதில் படுக்க வைப்பார்கள். கிராமத்தில் இன்னும் அதே முறை பின்பற்றப்படுகிறது. அவ்வாறு சேலையில் முடிச்சுப்போடும்போது அது அவிழ்ந்து விடுகிறதா அல்லது முடிச்சு பலமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் அம்மிக்குழவியைத் தொட்டிலில் போட்டு ஆட்டிப் பார்க்கிறார்கள்.
அதேபோல சேலையின் முடிச்சு கைக்கு எட்டும் உயரத்தில் இருக்குமாறும் பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் முடிச்சு பலமாக இருக்கிறதா, தளர்ந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ளலாமாம். என்ன நுணுக்கம் பாருங்கள்!

(குறிப்பு: படத்தில் காண்பது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அழகு மிகுந்த ஒரு கருப்பினக் குழந்தையை.! விரைவில் இதே இடத்தில் எனது குழந்தையின் புகைப்படம் இடம்பெறும்.

நிற்க.

குழந்தைகள் என்றாலே கொள்ளை அழகுதான். அதிலும் கருப்பினக்குழந்தைகள் இன்னும் அழகு. வெள்ளையர் ஒருவருக்கும் கருப்பினத்தவர் ஒருவருக்கும் பிறந்த குழந்தைகள் இன்னும் அற்புதம். ஏறத்தாழ இந்தியாவில் பிறந்த குழந்தை போலவே இருப்பதைக் காணமுடியும். இந்தப் பாசத்திற்கு ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் நமக்கும் உள்ள ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விட்ட குறை தொட்ட குறை உறவும் காரணமாக இருக்கலாம்)

Comments

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு