நான் சமூகவியலில் முதுகலைப்பட்டப் படிப்பை அண்மையில் படித்து நிறைவு செய்தததை நண்பர்கள் அறிவீர்கள். எனது தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம், சமூகவியல் பாடத்திட்ட வரைவுக்குழு உறுப்பினராக நியமித்திருக்கிறது. இது மூன்று ஆண்டுகளுக்கான பொறுப்பு ஆகும். ஊதியமற்ற பொறுப்பு எனினும் சமூகவியலில் ஆழமான அக்கறை கொண்டவன் என்ற முறையில் எனக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம்தான். இதற்காக நான் Tnou பல்கலைக்கும் துறைத்தலைவர் திரு.திருமால்ராஜா அவர்களுக்கும் எனக்கு ஊக்கமூட்டிய பேரா.குபேந்திரன் (பாரதிதாசன் பல்கலை) அவர்களுக்கும் மிக்க நன்றி.
இக்குழுவின் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள், ஊழியர்களுடன் இணைந்து கலந்துகொண்டேன். சமூகவியல் (எம்.ஏ) பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதுகுறித்து எனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறேன்.
சமூகவியல் பாடங்களில் மாற்றுத்திறனாளிகளின் உலகைப்பற்றிப் பெரிதாகப் பேசப்படுவதில்லை. அது ஒரு பெரும் பிழை. எனவே, விளிம்பு நிலையில் உள்ளோருக்கான வாய்ப்புகள்/சமூக விலக்கம் என்ற ஒரு பாடம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறேன்.
நாங்கள் அரும்பாடுபட்டுப் பெற்ற ‘மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் 14000 நியமன ஒதுக்கீடு’ பாடத்தில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
அதேபோல, பழைய பாடத்திட்டத்தில் பட்டியல் வகுப்பினரை ‘தாழ்ந்த சாதியினர்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அது தொடர்பான எனது கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டேன். அப்பாடத்திட்டம் தற்போது மாற்றப்பட்டுவிட்டது என்பதையும் எனது கவனத்துக்குக் கொண்டுவந்தனர். மகிழ்ச்சி.
மூன்றாம் பாலினத்தவர், பெண்கள், சிறார், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய (inclusive growth) குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும் என்றும் கோரியிருக்கிறேன்.
அதேபோல, கேரளத்தின் சமூக நீதி வரலாறு சமூகவியல் பாடங்களில் இடம்பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். மாப்ளா இயக்கம் குறித்து பாடத்திட்டத்தில் இருந்தாலும் சட்டம்பி சுவாமிகள், அய்யங்காளி ஆகியோரின் பங்களிப்பு பாடங்களில் இல்லை. அவற்றை இடம்பெறக் கோரியிருக்கிறேன்.
மேலும், சமூகத் தொழில் முனைவு குறித்த விருப்பப்பாடம் ஒன்றை அறிமுகப்படுத்தலாம் எனவும் சொல்லியிருக்கிறேன். தொண்டு நிறுவன மேலாண்மை குறித்தும் பாடங்களைச் சேர்க்க சகாக்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாக சமூகவியல் பாடங்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறேன். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்சஸ், ஹார்வர்ட், ஸ்டான்ஸ்ஃபோர்டு முதலிய கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து அவற்றிலுள்ள நல்ல அம்சங்களைச் சேர்க்க அறிவுறுத்தி வந்திருக்கிறேன்.
அடுத்தடுத்து நடக்க இருக்கும் கூட்டங்களில் அடுத்த கட்ட முன்னேற்றங்கள் இருக்கும். இப்பல்கலை, தமிழக அரசிடம் வைக்கும் கோரிக்கை ‘நிதி’ தான். அது இல்லாததால்தான் ஒரேயொரு முழுநேர உதவிப்பேராசிரியரை மட்டும் வைத்துக்கொண்டு பல துறைகள் இயங்குகின்றன (தற்காலிக விரிவுரையாளர்களின் உதவியுடன்). எனவே, தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதி ஆதாரங்கள், நிர்வாக அதிகாரங்களை வழங்கி அதன் நிலையை உயர்த்துமாறு மாண்புமிகு Udhayanidhi Stalin Udhayanidhi Stalin Chief Minister of Tamil Nadu ஆகியோரைக் கேட்டுக்கொள்கிறேன்.
சமூகவியலிலும் தமிழகம் சாதிக்க வேண்டுமானால் இதனைத் தமிழக அரசு செய்தே ஆகவேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக