ஆயிரம் ஜென்மங்கள்!

இன்றைக்கு இன்றைக்குப் பேய்  என்பது நவீன வடிவம் பெற்றிருக்கிறது. முன்பெல்லாம்ஆயிரம் ஜென்மங்கள்’;  ’பேய் வீடுஎன்று பள்ளிப்பருவத்தில் நான் பார்த்து நடுங்கிய திரைப்படங்கள் இன்று மறுபடி .டி.டி. தளத்தில் பார்க்கும்போது நகைச்சுவை படங்கள் போல தோற்றமளிக்கின்றன.


இன்றைக்கு பேய் என்பது கிராபிக்ஸ், அனிமேஷன் என்று பல்வேறு தொழில்நுட்பங்களைப் பின்னணியில் வைத்துக்கொண்டுவந்து பயமுறுத்துகிறது. இன்றைய பேயைக் காட்டிலும் அன்றைய பேய் நவீனமாக இல்லாவிட்டாலும் நமக்கு உள்ளே கிடந்த பயம் என்னும் சிறிய பூச்சியை டைனோசர் அளவுக்குப் பெரிதாக்கி, நம் கண்முன்னே காட்டியது மறக்க முடியாதது.


நீண்ட நாட்களுக்கு பிறகுஆயிரம் ஜென்மங்கள்படத்தை .டி.டி.தளத்தில் பார்த்தேன் நீர்வீழ்ச்சியின் இறந்துவிடும் கதாநாயகி தன் சாவுக்கு காரணமானவர்களை அதேபோல நீர்வீழ்ச்சியில் வைத்தே கொல்துவதான் கதை.




எப்போதெல்லாம் நாயகி, தண்ணீரில் கால் வைக்கிறாரோ அப்போதெல்லாம் கொலுசு ஓசை கேட்கும். பேய்களுக்கும் கொலுசுக்கு உள்ள உறவை உறுதிப்படுத்திய படங்களில் முக்கியமான படம்ஆயிரம் ஜென்மங்கள்’ (அதனை மையப்படுத்தித்தான்ஈரம்படம் வந்ததா என்று கேட்கக்கூடாது. அதேபோல,இதில்  நண்பனின் மனைவிக்குப் பேயோட்டும் ரஜினிதான் சந்திரமுகியிலும் வந்தாரா என்றும் கேட்கக்கூடாது).

 

நான் பள்ளி   சென்று கொண்டிருந்த வயது அது. இரண்டாவது முறையாக அப்படத்தை ஒட்டன்சத்திரத்தில் திரையிட்டிருந்தனர்என் அம்மாவும் பக்கத்து வீட்டு ஃபரிதா அக்காவும் என் தாயாரும் அந்த படத்தை பார்த்துவிட்டு இரவும் பகலும் நடுங்கிக்கொண்டிருந்தது இன்னும் நினைவிருக்கிறது.

 

சாலைப்புதூரில் நாங்கள் வாழ்ந்த வீடுகள்  இன்னும் இருக்கின்றன. ஒரு சுவர் மட்டும் இடையில் தடுப்பகக் கொண்ட 3 குடியிருப்புகள்நாங்களும் பரிதா அக்காவும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள்.

 

அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த என் அம்மாபயந்து கொண்டே தொடர்ச்சியாக அந்த அக்காவுடன் சத்தம்போட்டு உரையாடிக்கொண்டிப்பார். என் தந்தையாரும் இரவுதான் வீடு திரும்புவார். பரிதா அக்காவின் கணவரும் அப்படித்தான்.

 

பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை, “ பரிதா, என்ன செய்றே?” என்று கேட்பார். அவரும் பொறுப்பாக இரைந்து விடை சொல்லிக்கொண்டிருப்பார்.

 

பரிதா….மாவு ஆட்டியாச்சா?”

 

இல்லைக்கா

 

உடனே அம்மா, அவர்கள் வீட்டுக்குப் போய், அந்த அக்கா ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும்வரை பேசிக்கொண்டிருப்பார். நானும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்பேன்.

 

அதன்பிறகு எங்கள் வீட்டில் மாவாட்டும்வரை துணையாக பரிதா அக்கா  வருவா.ர் இப்படி இரவெல்லாம் ஓட்டிவிட்டு எப்போது விடியும் என்று இருப்பார்கள். பகலில் பேய்கள் வருவதில்லை என்பதால் அது கொஞ்சம் நிம்மதி.

 

அதன்பின் நானும் பேய்க்கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். எனவே, பேய்களை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று சிறுவயதில் ஏங்கி இருக்கிறேன். சாலைப்புதூரிலிருந்து காளாஞ்சிபட்டிக்குக்  குடிபெயர்ந்த பிறகு பேய் ஓட்டும் காட்சியை முதல் முறையாக பார்த்தேன். அநேகமாக

ஆனா நான் ஏழு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் அது.

 

இடையகோட்டை, வேடசந்தூர், குஜிலியம்பாறை போன்ற கிழக்குப் பகுதிகளிலிருந்து பேயோட்டிகள்  எங்கள் ஊருக்கு வருவர். அவர்களுள்  ஒருவர் எனக்கு உறவினர். அப்படித்தான் ஒருமுறை, முதன்முறையாக பேய் பிடித்த பெண்ணை நான் பார்த்தேன். எங்கள் ஊர்க்காரர்தான் அந்த அக்கா.

 

தலைவிரி கோலமாக அவரது இருக்க அவருக்கு முன்னால் ஒரு கலசத்தில் சாமி உருவங்கள் அலங்ங்கரிக்கப்பட்டுஊதுவத்திகள் மணந்துகொண்டிருந்தன. இரண்டு பேயோட்டிகள், உடுக்கையடித்தபடி அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அதற்கேற்ப, ’பேய் பீடித்தஅக்கா, கழுத்தைமட்டும் சுழற்றி, கைகளை ஊன்றியபடி ஆடிக்கொண்டிருந்தார்.

ஒன்றிரண்டு பாடல்கள் அல்ல….நூற்றுக்கணக்கான பாடல்கள்மணிக்கணக்கில், நாள் கணக்கில் நீளும் பாடல்கள்.

ஆடுவார்கள் பாடுவார்கள் பாடிக் கொண்டே இருப்பார்கள். அதிகபட்சம் ஒரு வாரம்வரை இதுநீளும்.

 

ஆடலும் பாடலும்நடக்கின்ற பொழுதே தனக்கு என்னவெல்லாம் தேவை என்றுபேய்சொல்லும். பேய் பீடித்தவரின் வீட்டார், அவற்றை வாங்கிக்கொடுக்க வேண்டும்உணவு பொருட்கள், சிகரெட், மது ஆகியவற்றைப் பொதுவாகப் பேய்கள் கேட்பதுண்டு.

 


பேய் பீடித்தவர் தான்இன்னாரென்று’ குறிப்பிட்ட நபரின் பெயரை சொன்னால் அந்த குடும்பத்தினர் அங்கு பேய் வடிவத்தில் வந்திருப்பவர்தனது தந்தை அல்லது தாய் அல்லது இறந்து போன தனது சகோதரி  என்று பாவித்துக் கதறியழுத காட்சிகள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன்.

 

அதில் உள்ள உண்மை, அறிவியல் ஆகியவற்றை ஒருபுறம் தள்ளுங்கள்ஆனால் இறந்துபோன ஒரு மனிதன் தனது குடும்பத்தினருடன் திரும்பவும் வந்து உரையாடுவது என்பது ஒரு உணர்வுபூர்வமான நம்பிக்கை

எனக்குத்தான் யாருமே இல்லையேஎன்னை ஏம்மா விட்டுட்டுப்போனே…?’ என்று அழுத அக்காமாரைக் கண்டிருக்கிறேன்.



நான் உனக்குத் தொணையிருப்பேன். அழுகாதே!’ என்று பேய்கள் ஆறுதல் சொல்லித்தேற்றும். ‘வாரம் ஒருமுறை என்னை நினைத்து விளக்குப் போட்டு கும்பிடுஎன்று தொடர்பை நீட்டிக்கும். எவ்வளவு அற்புதம் பாருங்கள்.

 

இந்தப் பேயோட்டுதலின் உச்சக்கட்டம் என்பது, ‘ஓங்காரம் போடுதல்என்பதாகும். ‘என்று பேய் அரற்றும். சம்பந்தப்பட்ட நபரை விட்டு விலகப் பேய் சம்மதிக்கிறது என்று பொருள். ஓங்காரம் போடாத பேய்களை சவுக்கால் விளாசுவார் பேயோட்டி. அதில் லாவகம் உண்டு என்பது தொழில் ரகசியம். ஒரு கட்டத்தில் அங்கிருந்து இரவு நேரத்தில் பேய் பிடித்தவரை அழைத்துக்கொண்டுபோய் ஊர் எல்லையில்  உள்ள சுடுகாட்டில் வைத்து பூசை செய்வர். பின்னர், பேய் பிடித்தவரின்  முடியை சிறிது பிடுங்கி எடுத்து பக்கத்துப் புளிய மரத்தில் ஒரு ஆணியில் சுற்றி, அதனை மரத்தில் அறைந்துவிட்டு வருவார்கள். இன்றும் பல மரங்களில் அதனை பார்க்கிறேன்.




(Image by Simon Wijers from Pixabay)




அதன்பின்னர் மூன்றில் இருந்து ஒன்பது வாரங்கள் வரை சங்கிலியாண்டவர் கோயிலுக்கு அப்பெண்சென்று வர வேண்டும்அதன் பின் அவரைப் பேய்கள் அண்டாது என்பது நம்பிக்கை.

 

நண்பர்களே, உண்மையில் இந்தப்  பேயோட்டும் பாடல்கள் ஒரு அற்புதமான இலக்கியம். அது மெல்ல அழிந்து வருவதைக் கண்முன்னால் காண்கிறேன். எந்த அளவுக்கு ஒரு மனிதன் இசையோடு இயைந்து பாடினால் ஒரு பேயே மயங்கும் பாருங்கள்அதில் மயங்கி, அந்த இசையால் கட்டுண்டு அந்த பேய் , பேயோட்டி சொல்வதைக் கேட்டுக்கொண்டு வெளியேறிவிடுகிறது. பேய் மயங்கும் பாடல்/இசை என்றால் மனிதர்களை எப்படி ஆட்டுவிக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

 

பேய்கள் இருக்கின்றனவோ இல்லையோ, பேயோட்டிகள் இருக்கிறார்களோ இல்லையோ…. ஆனால் அந்த உடுக்கை சத்தமும் அந்த ஓங்கார ஓசையும்  என் காதுக்குள் இன்னும்  கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

நீங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் பேய் ஓட்டுகிற உடுக்கை ஒலி கேட்டால் தயவுசெய்து உங்கள் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு போய் அமர்ந்து விட்டு வாருங்கள். உங்கள் மனதை அந்த இசை ஆட்டி வைக்கிற அழகை அனுபவிப்பீர்கள். உங்கள் மனப்பேய் அங்கு குதியாட்டம் போடும்.

 

காலம்பூராவும் ஓட்ட முடியாத பேயாக உங்கள் மனசு புளிய மரங்கள் சூழ் உலகில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும்.

 

பேய்கள் வாழ்க!

 

(அண்மையில் நான் கேட்ட பேய் ஓட்டும் பாடல் இது: https://www.youtube.com/watch?v=XQ8Vm9altMg)

 

 

 

Comments

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு