தலையைத்தட்டு

காளாஞ்சிபட்டியில் எங்களுக்கு நொறுக்குத்தீனி அதிகம் கிடைக்கவில்லை. சாலைப்புதூரைப்போல அது ஒன்றும் பெரிய நகரமில்லை(!) என்பதே காரணம். மேலும் முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமி விவசாயம் என்பதே காளாஞ்சிபட்டி வாழ்க்கையின் அடிநாதமாக இருந்தது. அதனால் வெறுமையும் வறுமையும் காளாஞ்சிபட்டியைப் பீடித்து இருந்தன. காளாஞ்சிபட்டியில் எனக்குப் பிடித்த விஷயங்கள் மூன்று:

1.வெயில்
2.வேப்ப மரங்கள்
3.சாவடி.

இவை ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக எழுத இருக்கிறேன். இப்போது நொறுக்குத்தீனி குறித்துப் பார்க்கலாம்.

அன்றைக்கெல்லாம் (1980களின் இறுதியில், 1990 களின் தொடக்கத்தில்) காளாஞ்சிபட்டியில் இரண்டே கடைகள்தான் இருந்தன. ஒன்று விஜயா அக்கா கடை (இன்றும் இருக்கிறது). 

அவரை நான் அம்மா முறை வைத்துக்கூப்பிடுவேன். இன்னொரு கடை பொட்டிக் கடை அய்யன் என்று சொல்லப்படும் வாத்தியார் கடை. அவர் எனக்கு உறவினர். அப்பாரு முறை ( அப்பாவின் அப்பாவை கொங்கு மண்டலத்தில் அப்பாரு என்று சொல்வோம். அம்மாவின் அப்பா அப்பிச்சி என்றழைக்கப்படுவார். அவரை நாங்கள் தாத்தா என்று அழைப்போம்).


வாத்தியார் கடையின் சிறப்பு, அது கொஞ்சம் பழைய கால முறைப்படி பொருட்களை விற்பனை செய்துவந்ததுதான். பண்ட மாற்று முறையை அவர் நடைமுறையில் வைத்திருந்தார்.

 வீட்டில் இருக்கும் சோளம், கம்பு ஆகிய தானியங்களை ஒரு டம்ளரில்,படியில் அளந்துபோய்க் கொடுப்போம்.

 உடனே அவர் வெல்லம், பொட்டுக்கடலை ஆகியவற்றைத் தருவார். சில நேரங்களில் எந்தப்பொருளுக்கு எதனை ஈடாகத்தருவது  என்பதில் குழப்பம் வந்துவிடும்.  

இறுதித்தீர்ப்பு கடைக்காரர் தருவதே என்பதால் பலரின் சாபத்துக்கு அவர் ஆளாக வேண்டியிருந்தது.

விஜயக்கா கடை கொஞ்சம் நவீனம். சுத்தமாக இருக்கும். ஆனால் அங்கு பண்டமாற்று கிடையாது. கெட்டி மைசூர்பா அங்குதான் கிடைக்கும். ஒருமுறை என் தாயார் உப்பு வாங்கிவரச் சொல்லியிருந்தார். கடைக்கு எதிர்புறம் இருந்த குடிசையில் உப்பு மூட்டை இருந்தது. என்னை எடுத்துக்கொள்ள சொல்லி விஜயாக்கா சொன்னார். 



நான் ஒரு படி நிறைய உப்பை அள்ளினேன். அங்கிருந்து “தலையைத் தட்டுடா துரையா” என்றார். நான் வெகுநேரம் என் தலையைத் தட்டிக்கொண்டிருந்தேன். “ என் தலையில் ஒன்றும் இல்லையே!” என்றேன். 

விழுந்துவிழுந்து சிரித்த அவர், ” அட திருவாத்தான் (திருவளத்தான்=கோமாளி), தலையைத் தட்டுவது என்றால் உன் தலையைத் தட்டக்கூடாது. வழிய வழிய எடுத்தாயல்லவா உப்பை....அப்படி எடுக்காமல் படியின் மேல் மட்டம் வரை எடுக்க வேண்டும்.மிகையாக இருப்பதைத் தள்ளிவிட வேண்டும்” என்றார். 

எனக்கென்ன தெரியும்...தலையைத்தட்டுவதும் வாலைத் தட்டுவதும்...நான் சாலைப்புதூரில் வளர்ந்தவன்...கிராமாத்தானா என்ன!

இந்த தலை தட்டுவதை தெற்கத்திச் சீமைக்காரர்கள் ‘தலை தடவ’ என்று அழைக்கின்றனர். 


காளாஞ்சிபட்டி கடைகளில் நாங்கள் வாங்கும் நொறுக்குத்தீனிகள் கடலை மிட்டாய், கடலை உருண்டை, தேன் மிட்டாய், கல் போன்ற பதத்தில் செய்யப்பட்ட மைசூர்பாகு (அதனை உடைத்துத் தருவார்கள்), இலந்தை வடை, ஆரஞ்சு மிட்டாய், பாம்பு ரொட்டி, 5 பைசா ரொட்டி, ஜவ்வு மிட்டாய் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அப்பாரு கடையில் பொட்டுக்கடலை, வெல்லம் மட்டும்தான். 


வசதியானவர்கள் சோடா, கலர், ஜிஞ்சர் குடிப்பதுண்டு. எனக்கு கலர், பன்னீர் சோடா ஆகியவை ரொம்பவே பிடிக்கும். கோலி சோடா இன்று நடைமுறையில் காணாமல் போய்விட்டது. 

ஆனால் அன்றைக்கு வயிற்றுவலிக்கு பெரிய மருந்தாக இருந்தது அதுதான். கோலி சோடா உடைக்கும் கட்டைகளும் இன்றும் என் மனதில் பசுமரத்தாணிபோலப் பதிந்திருக்கின்றன.


அன்றைக்கு வீட்டுவிலக்கு தள்ளிப்போகும் பெண்கள் ஒரு மருந்து வைத்திருந்தனர். ஜிஞ்சரில் (குளிர்பானம்தான்) சிறிதளவு சீனியைப்போட்டு குடித்துவிடுவர். 

உடனடியாக வீட்டுவிலக்காகிவிடுவர்.  பன்னீர் சோடா, பந்தா பானம். எனவே அந்தப் பக்கம் நாங்கள் அதிகம் சென்றதில்லை. 

(இன்னும் பேசுவோம்)

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு